ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுமனை இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி கூறியுள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து புதன்கிழமையுடன் (நவம்பர் 20) 150 நாள்கள் நிறைவடைந்தன.
அதை முன்னிட்டு புதன்கிழமை சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் நாயுடு, வீட்டுமனை வழங்குதல் குறித்து அறிவித்தார்.
அவர் தமது உரையில், “ஏறக்குறைய 40 ஆண்டுகளாக என்னை ஆதரிக்கும் மக்களுக்குப் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளேன். செய்யாத குற்றத்திற்குப் பொய் வழக்குகள் தொடுத்து 53 நாள்கள் என்னைச் சிறைக்கு அனுப்பினர். என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால்தான் நான்காவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளேன்,” என்று கூறினார்.
மேலும், “கடந்த ஆட்சியில் பல துறைகள் வளர்ச்சியை எட்ட முடியாமல் திணறின. இறுதியில் கடன்தான் மிஞ்சி இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தபோது பல சவால்கள் காத்திருந்தன. இப்போது ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக்கொண்டு முன்னேறிச் செல்கிறோம்,” என்றார் நாயுடு.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேருடன் மத்திய அரசின்முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம். இதனால் நம்முடைய செல்வாக்கு டெல்லியில் அதிகரித்துள்ளது,” என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
அத்துடன், “பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு, விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.