லங்காவி:
Kampung Angkat Madani (KAM) எனப்படும் மடானி -கிராம அபிவிருத்தி திட்டம், நாடு முழுவதும் மொத்தம் 42 கிராமங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள RM100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிகபட்சமாக RM2.5 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், இதில் 85 விழுக்காடு அபிவிருத்தி திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
மேலும் “இந்த மொத்தத் திட்டங்களில், 262 பல்நோக்கு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், சூராவ் பழுதுபார்ப்பு மற்றும் பாலம் மேம்படுத்தும் பணிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளை உள்ளடக்கியுள்ளன என்று அவர் சொன்னார்.
“இந்த சாதனை மத்திய அரசு, மாநில அரசுகள், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள், பொது பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும்,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.