மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை “அவபிரதம்” என்று சொல்லுவார்கள். திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும். மாசி மாதத்திற்கு “மாகம்” என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மகம் நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம்.
பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குரு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இவர் சிம்ம ராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கை தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்ப ராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் “மாமாங்கம்” என்று கூறுகின்றனர்.
கும்பகோணத்திற்கு மட்டும் அப்படி என்ன ஒரு விசேஷம் என்று கேட்கலாம். ராசிகளில் மாசி மாதத்திற்கு உரிய ராசி கும்ப ராசி. அதிலே, கும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குரு, சிம்ம ராசிக்கு வந்து சந்திரனுடன் சேரும் காலம் தான் மகாமகம். சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5 ஆவது ராசி(புண்ணிய ராசி). ஐந்தாவது ராசியை திரிகோண ராசி அல்லது கோண ராசி என்று சொல்லுவார்கள். கும்பமும் (கும்பராசியும்) கோணமும் (திரிகோண ராசியான சிம்மம்) சந்திக்கக்கூடிய புனிதமான நாள் என்பதால் கும்பம் மற்றும் கோணம் இணைந்து கும்பகோணம் ஆகியது. கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் “அமிர்த தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகிய 16 வகையான லிங்கங்கள் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை உருவாக்கியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.
பிற இடங்களில் வாழ்வோர் தங்கள் பாவம் தீர காசியில், கங்கையில் நீராடுவார்கள். காசியில் இருப்போர் செய்த பாவம் தீர வேண்டுமானால் குடந்தை மாமாங்கக் குளத்தில் நீராடுவராம். மகாமககுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும் இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். இக்குளத்தில் ஒருமுறை வலம் வந்தால் பூமியை 100 முறை வலம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்த்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாவங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலே கூட புண்ணியம் தான்.



















