தோக்கியோ:
பிரேசிலின் தென்பகுதியிலுள்ள மொண்டெனெகிரோ நகரிலிருந்து கோழிகளின் இறக்குமதிகளைச் செய்தவதை ஜப்பான் இடைக்காலமாக நிறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்று அங்கு புதிதாக ஏற்பட்டதை அடுத்து, ரியோ கிராண்ட் டோ சுல் மாநிலத்திலிருந்து உயிருள்ள கோழிகளை இறக்குமதி செய்வதையும் தம் நாடு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஜப்பானின் வேளாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கோழி ஏற்றுமதியாளரான பிரேசில், தனது கோழிப்பண்ணை ஒன்றில் கிருமிப்பரவல் ஏற்பட்டதை உறுதிசெய்ததை அடுத்து இந்தத் தடை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடப்புக்கு வந்தது.
சீனாவின் கோழி இறக்குமதிகள் அரைவாசிக்கும் அதிகம் பிரேசிலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கோழி இறக்குமதிகளுக்காக பிரேசிலை அதிகம் நம்பும் ஜப்பானில் இதனால் உணவு விலையேற்றம் அதிகரிக்கக்கூடும்.
கோழி இறைச்சியைப் பொறுத்தவரையில் ஜப்பானின் தன்னிறைவு விகிதம் 65 விழுக்காடு என்று ஜப்பானின் வேளாண்மை, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலிய கோழிகளுக்குத் தடை விதித்தத் தரப்புகளில் ஐரோப்பிய ஒன்றியமும் தென்கொரியாவும் அடங்கும்.
சிங்கப்பூரின் கோழி உணவுப்பொருள்களில் 48 விழுக்காடு பிரேசிலில் இருந்து தருவிக்கப்படுவதாக 2021ல் பதிவான தகவல்கள் குறிப்பிடுகின்றன.