புத்ராஜெயா,
மடானி தலைமைத்துவத்தின் கீழ் நேரடி வெளிநாட்டு முதலீடு, சுற்றுலாத்துறை இலக்காக தென் கிழக்காசியாவின் ஓர் ஒளிரும் நட்சத்திரமாக தன்னுடைய நிலையை மலேசியா வலுப்படுத்திக் கொண்டுள்ளது என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார். இந்த இரு துறைகளிலும் மலேசியா இவ்வட்டாரத்தின் முதல் நிலை இலக்காக திகழ்கிறது என்று அவர் சொன்னார்.
சிறந்த நிர்வாகம், நட்பு ரீதியிலான முதலீட்டாளர் கொள்கைகள், வலுவான அனைத்துலக உறவுகள் ஆகியவற்றில் மடானி அரசாங்கத்தின் கடப்பாடுகளை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது. விசா விதிமுறைகளை எளிமையாக்குவது, தூதரக உறவுகளை வலுப்படுத்துவது போன்றவை மடானி அரசாங்கத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று அண்மையில் ஐநா வாழ்விடம் பொதுப்பேரவை புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஙா கோர் குறிப்பிட்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட 2025 பேஸ்லைன் புரோஃபிட்டெபிலிட்டி இன்டெக்ஸ் (BPI) பட்டியலில் உலகளாவிய அளவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு மிகுந்த பொருத்தமான இலக்காக மலேசியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. மலேசியாவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவும் ருவாண்டாவும் உள்ளன. பிராந்தியத்தைப் பொறுத்தவரை தென் கிழக்காசியாவில் மலேசியா முன்னணியில் இருக்கிறது. சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பின்தள்ளப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
பிரபல பொருளாதார நிபுணரான டேனியல் அல்ட்மென் BPI பட்டியலைத் தயாரித்திருக்கிறார். 100 நாடுகளை அவர் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார். லாபம் சம்பாதிப்பது, மதிப்புமிகு பாதுகாத்தல், முதலீட்டு மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் என்று அவர்
சொன்னார்.
மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்பாடாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. ஆசியான் உறுப்பு நாடுகளுள் மலேசியா இதில் முன்னிலை வகிக்கிறது. 2025 முதல் காலாண்டில் ஆக அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவைத் தங்களது இலக்காகத் தேர்வு செய்திருக்கின்றனர். சுற்றுலாத்துறையில் மலேசியாவின் இந்த அபார வளர்ச்சி தாய்லாந்தைப் பின்தள்ளி இருக்கிறது என்று வியட்நாம் எக்ஸ்பிரஸ் கூறியது.
மலேசியா 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 10.1 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வரவேற்றிருக்கிறது என்று சில ஆசியான் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி வியட்நாம் எக்ஸ்பிரஸ் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதேசமயத்தில் தாய்லாந்து 9.55 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்று இரண்டாவது நிலையைப் பிடித்திருக்கிறது. வியட்நாமிற்கு 6 மில்லியன், சிங்கப்பூருக்கு 4.31 மில்லியன் சுற்றுப்பயணிகள் இக்காலகட்டத்தில் வருகை புரிந்திருக்கின்றனர். ஐநா – வாழ்விடம் பொதுப் பேரவையின் தலைவராக தலைமைத்துவத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்று நாட்டின் குறிப்பிட்ட ஙா கோர் மிங், நிலையான நகர மேம்பாடு இதற்குத் துணையாக இருந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மலேசியா அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்தப் பதவியை ஏற்றிருப்பதன் மூலம் மலேசியா அனைத்துலக ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்துவதோடு உலக அரங்கில் நம்முடைய செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் பயன்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். உலக அரங்கில் மலேசியா முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதோடு எழுச்சி பெற்றிருக்கின்ற நிலையில் அரசியல், பொருளாதார நிலைத்தன்மையைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்று ஙா கோர் மிங் கேட்டுக் கொண்டார்.




















