புத்ராஜெயா:
இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) மூலம் கல்வி உதவிகளைப் பெற்ற தனியார் பாலர் பள்ளிகள், பெற்றோரிடம் கூடுதல் மாதாந்திரக் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மித்ரா தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் எச்சரித்தார்.
பி40 பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு சுமை ஏற்படுத்தும் இந்த மாதிரியான நடைமுறைகள் நடைபெறாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
“மித்ரா முழுமையான கல்வி உதவிகளை வழங்கியிருந்தும், சில தனியார் பாலர் பள்ளிகள் கூடுதல் மாதாந்திரக் கட்டணத்தை பெற்றோரிடம் வசூலித்ததாக புகார்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து சில பள்ளிகளுக்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகள் பெற்றோரிடமிருந்து வசூலித்த கூடுதல் தொகையை திருப்பி வழங்கியுள்ளன. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
2025 Anak Pintar, Negara Gemilang ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் ஒப்பந்த கையொப்ப விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்திட்டத்திற்காக 178 தனியார் பாலர் பள்ளிகள் விண்ணப்பித்த நிலையில், 173 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 பள்ளிகள் நிராகரிக்கப்படவில்லை; தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் தற்காலிகமாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.
இந்தத் திட்டத்திற்காக 77 லட்சத்து 50 ஆயிரத்து 575 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 4,025 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர் என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.




















