கோலாலம்பூர் –
சபாவில் வெள்ளநிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, 916 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,134 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) தெரிவித்துள்ளது.
இது, நேற்று மாலை பதிவான 814 குடும்பங்களைச் சேர்ந்த 2,919 பேருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
JPBN வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது பியூஃபோர்ட், மெம்பாகூட், பெனாம்பாங், பாப்பார், புட்டாடன் மற்றும் சிபிதாங் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 27 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.
“இந்நிலையில் சிபிதாங்கில் வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பியூஃபோர்ட், பாப்பார் மற்றும் புட்டாடனில் நிலைமைகள் மாறாமல் உள்ளன. இதற்கிடையில், பெனாம்பாங் மற்றும் மெம்பாகூடில் வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 முதல் சபாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்தம் 127 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசிய வானிலை ஆய்வு மையம், சபாவின் பல பகுதிகளில் இன்று காலை மற்றும் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இரவில் உள்நாட்டு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















