கொழும்பு:
கடலில் பெருமளவில் மாசு ஏற்படுத்தியதற்காக இலங்கை அரசு விதித்த US$1 பில்லியன் (S$1.3 பில்லியன்) அபராதத்தை செலுத்த சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
“இந்த அபராதத்தைச் செலுத்துவது பல்வேறு தீவிரமான தாக்கங்களையும் அபாயகரமான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும். எனவே, நாங்கள் இந்த அபராதத்தை ஏற்க முடியாது” என்று, நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷ்முவெல் யோஸ்கோவிட்ஜ் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த 2021 ஜூன் மாதம், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ‘எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்னும் கொள்கலன் தாங்கிக் கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. இதன்போது கப்பலில் இருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததால் தீ ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல கொள்கலன்கள் கடலுக்குள் மூழ்கின.
கப்பலில் இருந்த 81 கொள்கலன்களில் அமிலங்கள், ஈயம், மற்றும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன.
நைட்ரிக் அமிலம் கசியத் தொடங்கியபோது கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்கள் கப்பலை ஏற்க மறுத்தன. இறுதியில் அது கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.
தீ விபத்துக்குப் பின்னர், நுண்பிளாஸ்டிக் துகள்கள் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் சிதறின. இது இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசு சம்பவமாக பதிவானது.
இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குறித்த கப்பல் நிறுவனம் US$1 பில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதில் முதல் தவணையான US$250 மில்லியனை செப்டம்பர் 23க்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறுவனம் நிராகரித்துள்ளது.
“கடல்துறை வர்த்தகத்தில், வரம்புக்குள் பொறுப்புகள் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. ஆனால் இலங்கை வழங்கிய தீர்ப்பு அந்த நியதிக்கே முரணானது. எனவே நாங்கள் அபராதத்தைச் செலுத்த மாட்டோம்.” என்று, யோஸ்கோவிட்ஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அதிகாரிகள் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தேவையானால் அனைத்துலக (arbitration) நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.





















