SJKT Taman Desa Pinji பள்ளியின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் — நர்மதா ஆறுமுகம், தரினி தயானந்த், மற்றும் திவிஷா சிவராஜ் — சமீபத்தில் டென்பசார், பாலியில் நடைபெற்ற சர்வதேச புதுமை போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
இந்த போட்டியில் அனைத்துலக ரீதியில் 24 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. மொத்தம் 300-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. மலேசியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் வந்த நிலையில், பேராக் மாநிலத்திலிருந்து ஒரே ஒரு அணி — SJKT Taman Desa Pinji — பங்கேற்றது. மேலும், வட கிந்தா மாவட்டத்திலிருந்து வெளிநாடு சென்ற முதல் புதுமை அணி என்ற பெருமையையும் நிலை நாட்டியுள்ளது.
மாணவர்கள் உருவாக்கிய Reptox பாம்பு விரட்டும் திட்டம் பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. இந்த யோசனை சர்வதேச மேடையில் பாராட்டைப் பெற்றது, பள்ளியின் பெயரை உலகளவில் உயர்த்தியது.
இந்த சாதனை சாத்தியமானது பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சரஸ்வதி பரமசிவம் அவர்களின் அயராத முயற்சியால். அவர் பல்வேறு தானதாரர்களை அணுகி நிதி உதவிகளை பெற்றார். குறிப்பாக, நிதியுதவி வழங்கிய டத்தோ சிவனேசனுக்கு பள்ளி சமூகமே மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
மேலும், பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG) வழங்கிய ஆதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. பள்ளி சமூகமே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார் அவர்.
மாணவர்களைப் பயிற்றுவித்த அறிவியல் ஆசிரியர்கள் திருமதி அனுராதா முருகேசன், திருமதி தமிழ்செல்வி முத்தையா, மற்றும் திருமதி ஜெயந்தி அய்யாவு ஆகியோரின் அர்ப்பணிப்பு இந்த வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
“இந்த அனுபவம் எங்களுக்கு குழு ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, மற்றும் உலகளாவிய போட்டியில் எவ்வாறு திகழ்வது என்பதை கற்றுத்தந்தது. எதிர்காலத்தில் மேலும் பல புதுமைகளை உருவாக்கி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்க விரும்புகிறோம் என மாணவர்கள் தெரிவித்தனர்:.



















