கோலாலம்பூர்:
பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு அதன் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அழைக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முஹிடின் யாசின் கடந்த ஜனவரி 1 முதல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டார். தற்போது அவர் கூட்டணியின் உச்சமன்ற உறுப்பினராக (Supreme Council Member) இல்லை. எனவே, எஞ்சியுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முஹிடின் போலவே ஏற்கனவே பதவி விலகிய அஸ்மின் அலி (தலைமைச் செயலாளர்) மற்றும் ராட்ஸி ஜிடின் (தகவல் தொடர்புத் தலைவர்) ஆகியோரும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று, PN கூட்டணியின் துணைச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
முஹிடின் யாசின் விலகலுக்குப் பிறகு, கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க பாஸ் (PAS) கட்சி தயாராக உள்ளது. இந்த நிலையில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தனது கட்சி தலைமையேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் அப்பதவியை ஏற்க மறுக்க வாய்ப்புள்ளது.
திரெங்கானு மந்திரி பெசார் டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் அல்லது பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















