கெப்பாலா பத்தாஸில் வீடு தீப்பற்றி எரிந்து விபத்து; மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!

கெப்பாலா பத்தாஸ் | மார்ச் 13, 2026:

கெப்பாலா பத்தாஸில் உள்ள கம்போங் குவார் கெப்பாயாங் (Kampung Guar Kepayang) பகுதியில் இன்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், வீடு ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன், அதில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மாலை 4:59 மணியளவில் தீ விபத்து குறித்த அவசர அழைப்பு வந்துள்ளது. 5:15 மணியளவில் முதல் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்தைச் சென்றடைந்தது. தீயை அணைக்கும் பணியின் போது, மாலை 5:55 மணியளவில் வீட்டின் ஒரு அறையிலிருந்து ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் ஒரு மூதாட்டி என்று நம்பப்படுகிறது என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் 40×80 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீடு, தீயினால் 70 விழுக்காடு சேதமடைந்துள்ளது.

கெப்பாலா பத்தாஸ், தாசேக் குளுகோர் (Tasek Gelugor) மற்றும் பட்டர்வொர்த் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 21 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மாலை 5:40 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவத்தில் போலீசார், தெனாகா நேஷனல் (TNB) மற்றும் கெப்பாலா பத்தாஸ் தன்னார்வத் தீயணைப்புப் படையினரும் உதவி வழங்கினர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here