வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு – தொழிற்சாலை ஊழியர் படுகாயம்

கூலிம் | சனி, 21 மார்ச் 2026

நேற்று நள்ளிரவு பாடாங் செராய் (Padang Serai) பகுதியில் ஏற்பட்ட ஒரு கடும் வாக்குவாதத்தின் போது, 24 வயதுடைய தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மார்பு மற்றும் கையில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்.

நேற்று இரவு 11:50 மணியளவில், செபெராங் பாயா (Seberang Paya), கம்போங் பெர்மாத்தாங் துரியன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன்னால் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட இளைஞர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, 42 வயதுடைய சந்தேக நபரால் மறிக்கப்பட்டார்.

கூலிம் துணைப் போலீஸ் படைத் தலைவர் டிஎஸ்பி தெங்கு முகமட் பைசல் டெங்கு யெங் (DSP Tengku Mohd Faisal Tengku Yeng) இது குறித்துக் கூறுகையில், “சந்தேக நபர் முன்னதாகவே பாதிக்கப்பட்ட இளைஞரைத் தொடர்பு கொண்டு, கம்போங் நாகா லிலிட்டில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், வழியிலேயே அவரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனது துப்பாக்கியால் சுட்டதில், இளைஞரின் வலது கை மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது.”

விபத்து நடந்தவுடன் பாதிக்கப்பட்ட இளைஞர் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துரிதமாகச் செயல்பட்ட போலீசார், கம்போங் நாகா லிலிட்டில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் இருந்த லாரி ஓட்டுநரான சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஒரு ரிவால்வர் (Revolver) துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 வெற்று உறைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஹோண்டா சிவிக் (Honda Civic) கார் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் ஆகிய இருவருக்குமே நீண்ட கால குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 42 வயது சந்தேக நபருக்கு 11 குற்றவியல் வழக்குகள் மற்றும் 3 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளன.

அத்தோடு 24 வயதான பாதிக்கப்பட்டவருக்கு 6 போதைப்பொருள் வழக்குகள் மற்றும் பிற குற்றவியல் பதிவுகள் உள்ளன.

இந்த வழக்கு 1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டம் (அதிகரிக்கப்பட்ட தண்டனைகள்) பிரிவு 3 மற்றும் தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here