கோலாலம்பூர்:
பேராக் மாநிலத்தின் கெரிக் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் புலி ஒன்று உலா வருவதைக் கண்டு லாரி ஓட்டுநர் ஒருவர் அதிர்ச்சியடைந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தாசிக் தெமெங்கோர், புலாவ் பண்திங் அருகே உள்ள புக்கிட் ஜாலா பகுதியில் நள்ளிரவில் பதிவான இக்காணொளியில், லாரியின் ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் புலி மீண்டும் காட்டுக்குள் ஓடி மறைவது தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக மோட்டார் சைக்கிள், மிதிவண்டிப் பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது.




















