கோலாலம்பூர்:
கோலாலம்பூர், மத்திய வட்டச் சாலை 2-இல் (MRR2) கெப்போங் நோக்கிச் செல்லும் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது வருங்கால கணவர் (31) பலத்த காயமடைந்தார்.
இன்று அதிகாலை சுமார் 2:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த ‘புரோட்டான் பெர்சோனா’ (Proton Persona) ரக கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பள்ளி பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது.
அந்தப் பள்ளி பேருந்து எவ்வித எச்சரிக்கை சமிக்ஞைகளும் (warning signs) இன்றி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண்ணுக்கு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
காரை ஓட்டிய நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, அவர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் அல்லது மது அருந்தியுள்ளாரா என்பதைச் சோதிக்க அவரது இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அதிகாலை 2:57 மணிக்கு அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-இன் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















