நெகிரி செம்பிலான் ஜசெக புதிய தலைவராக ஜே. அருள்குமார் ஏகமனதாகத் தேர்வு!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக கட்சியின் புதிய தலைவராக, நீலாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அம்மாநில ஜசெக தலைவராகப் பொறுப்பு வகித்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அந்தோனி லோக் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவராக அருள்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மாநில ஜசெக குழுக் கூட்டத்தில் இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.இத்தேர்வு குறித்துப் பேசிய அந்தோனி லோக், “மாநிலக் குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் சீன இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், தலைவராக அருள்குமாரையே தேர்வு செய்துள்ளனர். அருள்குமாரின் இந்தத் தேர்வு, ஜசெக அனைத்து இன மக்களுக்குமான கட்சி என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் நீலாய் தொகுதியில் போட்டியிட்ட அருள்குமார் 5,937 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here