ஒருவழியாக குடும்பத்துடன் இணைந்த பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஜோர்டான் சென்றிருந்தார். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.

இதனிடையே வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரும் படக்குழுவினர் 57 பேரும் கடந்த மாத இறுதியில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

14 நாட்கள் முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால், நடிகர் பிருத்விராஜ் அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் மனைவி, மகளை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மீண்டும் சேர்ந்துவிட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here