சிவபெருமானின் பஞ்ச சபை

நடராஜரின் நடன சபைகள் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.

சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.

பொற்சபை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது திருமூலட்ட நாதர் ஆலயம். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை. பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.

இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ஆனந்த தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

சித்திர சபை

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார்.

இங்கு நடனம் புரிந்த இறைவனின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது.

இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் திரிபுர தாண்டவம் எனப்படுகிறது.

ரத்தின சபை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம்.

இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது.

இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.

காளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு.

காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் என்று போற்றப்படுகிறது.

வெள்ளி சபை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே வெள்ளி சபை என்று போற்றப்படுகிறது. இதனை வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.

இங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார்.

அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவனின் நடனம் சந்தியா தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

தாமிர சபை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே தாமிர சபை என்று போற்றப்படுகிறது.

இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார்.

இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது.

இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது திருத்தாண்டவம் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here