ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா குற்றம்சாட்டியது சர்ச்சையானது. இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனாவின் இல்லத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் நான் படித்துக்கொண்டு இருந்தபோது எனது வீட்டின் அருகில் இரண்டு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 8 வினாடி இடைவெளியில் 2 முறை சுட்டனர். வீட்டின் பின்புறத்தில் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்காக கூட இத்தகைய மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சத்தம் கேட்டதும் பாதுகாவலர்கள் சென்று தேடியபோது யாரும் இல்லை. உள்ளூரில் யாருக்காவது பணம் கொடுத்து இப்படி செய்து இருக்கலாம். சுஷாந்த் சிங்கையும் இப்படித்தான் மிரட்டப்பட்டு பயமுறுத்தி இருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, அஞ்ச மாட்டேன் தொடர்ந்து கேள்வி கேட்பேன்” என்றார். இதையடுத்து கங்கனா வீட்டில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.