தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் புத்தாக்க நூல்

  புதிய பாதை  வழி காட்டுகிறது! 

பந்திங்-

அண்மைக் காலமாக அனைத்துலக அளவில் நடைபெற்று வரும் அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்து வருகிறார்கள்.

இவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் புதிய பாதை என்ற தலைப்பில் அறிவியல் புத்தாக்க நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூல் 150 பக்கங்களைக் கொண்டதாகும் என்று நூலின் ஆசிரியரும் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான கணேஷ் ராமசாமி தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பள்ளியின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற பிறகு பள்ளியின் அறிவியல் ஆசிரியர், பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் ஒத்துழைப்பில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்துலக ரீதியில் மிகச் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி 17 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.

குறிப்பாக மின்கொடி கண்டு பிடிப்பிற்காக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே தமிழ்ப்பள்ளியாக ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

தமது நிர்வாகத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் சிறந்து விளங்குவதைப்போல் மற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இதுபோன்ற போட்டிகளில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக இது அமையும் என்று அவர் கூறினார்.

மேலும் நாட்டில் உள்ள 536 தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிகள், அதில் வெற்றி பெற்ற பள்ளிகள், இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகள், இன்னும் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ளாத பள்ளிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் இப்புத்தகம் பயன்பெறும் வகையில் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்புத்தகத்தில் அறிவியல் புத்தாக்கம் தொடர்பான விளக்கங்கள், தமிழ்ப்பள்ளியில் அறிவியல் புத்தாக்கத்தின் தேவைகள், அறிவியல் புத்தாக்கம் தொடர்பான இயக்கங்களும் அதன் சேவைகளும்,அனைத்துலக புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள், அரசு / அரசு சாரா இயக்கங்களின் அளப்பரிய சேவைகள்,புத்தாக்கப் பள்ளிகளின் வெற்றிக் கதைகள் போன்ற பல அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்நூலை கல்வியாளர் குமரன் வேலு நூலாய்வு செய்து பாராட்டியுள்ளார். இன்று தரமே தாரக மந்திரம். மக்கள் தரத்தை விரும்புகின்றனர். அது எந்தத் துறையாக இருப்பினும் தரமே மக்களின் எதிர்பார்ப்பு. வாடிக்கையாளர்கள் தடம் மாறுவதற்கு தரக்குறைவே ஒரு முக்கிய காரணம்.

ஆசிரியர் தரம், கற்றல் கற்பித்தல் தரம், இணைப்பாட நடவடிக்கைகளின் தரம், பள்ளியின் கட்டட கட்டமைப்பு வசதிகளின் தரம், பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவின் தரம், மாணவர்கள் பெறுகின்ற அடைவு நிலைகளின் தரம் என எல்லாவற்றிலும் தரமே உயிர் நாடி.

இதை நன்கு உணர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் தரம் உயர்த்தும் முயற்சிகளில் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தும் என்பதை இந்த நூலில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பில் மாணவரை ஈடுபடுத்துவதைக் கூடுதல் கலைத்திட்டம் அல்லது பாடம் என்றும் வகைப்படுத்தலாம். உலகளவில் பேசப்படுகின்ற அறிவியல் புத்தாக்க முனைப்புக்கு கிடைத்த வெற்றி , பள்ளிக்கு அங்கீகாரத்தையும் நற்புகழையும் தந்திருக்கிறது என்று கல்வியாளர் குமரன் வேலு தமது நூலாய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் எனினும் தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தற்போது மின்வர்த்தக முறையில் புத்தகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எனவே பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் புத்தகம் குறித்தும், அதனை எவ்வாறு பெறுவது பற்றியும் தம்மை தொடர்பு கொள்ளும்படி கணேஷ் ராமசாமி கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு 012-6736101 (கணேஷ் ராமசாமி).

எம்.எஸ்.மணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here