ருத்ராட்சத்தின் மகிமைகளும் அதன் சிறப்புக்களும்

இவ்வுலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை சென்றடைவதே இப்பிறவியின் நோக்கம். அதற்காக ஒவ்வொருவரும் தமக்கு இலகுவான வழிகளை பின்பற்றி இறைவனின் அருளை பெற முயற்சிக்கின்றனர். சிவ சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.

ருத்ரன் என்றால் சிவன். ராட்சம் என்றால் கண். எனவே ருத்ராட்சம் என்றால் சிவனின் கண் என்று பொருள். இதை யார் எல்லாம் அணிந்து கொள்கின்றார்களே அவர்களை சிவன் கண்ணைப்போல் பாதுகாப்பார்.

இந்த ருத்ராட்சம் ஒரு மரத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஒரு காய். ஈலியோ கார்ப்பஸ் கனெக்ரஸ் என்பது அந்த மரத்தின் உயிரியல் பெயர். இந்த மரம் அதிகமாக நேபாளத்தில் உள்ளது.

ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமானது. அது சிவ பெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாகும். சிவ பெருமான் பொன்னால் அலங்கரித்துக் கொள்ளாமல், ருத்ராட்சம் தன் அலங்காரப் பொருளாக வைத்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.

நாம் இங்கு ருத்ராட்சம் அணிவதால் என்ன பலன், நம் உடல் மற்றும் மனதில் எப்படிப்பட்ட மாற்றங்கள், பலன்கள் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.

ருத்ராட்சம் அணிவதால் நம் மனதில் சிவ சிந்தனைகள் எழும்.
மற்றவர்கள் நம்மை பார்க்கக்கூடிய கெடு பார்வை நம்மை பாதிக்காது.

ருத்ராட்சம் நம் மனதில் எழும் எதிர்மறை சிந்தனைகளை அழிப்பதோடு, நம்மை அண்டும் எதிர்மறை சக்திகளை நீக்கும்.

எந்த ஒரு விஷயம், நிகழ்வை ஆழ்ந்து நோக்கச் செய்யும்.

நாம் செய்யும் செயலில் துரிதம் மட்டுமல்லாமல், தெளிவாக செயல்பட வைக்கும்.

எந்த ஒரு வேண்டாத பழக்கங்கள் நம்மை விட்டு அதுவாக விலகும். ஏதேனும் கெட்ட பழக்கத்தை விட நினைப்பவர்கள், ருத்ராட்சம் அணிவதால் அந்த கெட்ட பழக்கம் நீங்கும்.

எதிலும் ஒரு திருப்தி ஏற்படும்.

நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்குவதோடு, நம்மை மேன்மை அடைய வைக்கும் நல்லுணர்வு அதிகரிக்கும்.

ருத்ராட்சம் அணிவதால் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படும்.

ருத்ராட்சம் அணிந்தால் நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதை உடனடியாக சமாளிக்க, போக்க நமக்கு வழி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு துன்பம் வரப்போகிறது என்பதை முன்னரே உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

துன்பத்தை உணருவதோடு, துன்பம் வர காரணமானவற்றையும் உணரக்கூடிய அற்புத பலன் கிடைக்கும்.

ருத்ராட்சம் அணிந்து குளிப்பதே நாம் கங்கையில் நீராடிய பலனை தரும் என்கின்றார்கள்.

அறிவியல் ரீதியாக என்ன மாற்றம் நிகழும் என்று நோக்கின், அதிகமான மன அழுத்தத்தை குறைக்கும் , இதய சம்மந்தமான பிரச்சினைகளையும் குறைக்கும் என்கின்றனர்.

அதாவது எதிர்மறை எண்ணங்களை குறைக்கும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு. எனவே அது நேர்மறையான எண்ணங்களையே அதிகமாக ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் தீட்டு ஆன இடம் நம் சிவபெருமான் இருக்கும் சுடுகாடு. அதனால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை. சிவபெருமான் எந்த பேதமும் அற்றவர் என்பதால், ஆண், பெண், திருநங்கை என யார் வேண்டுமானாலும், எந்த ஒரு பேதமும் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம். 5 கோடுகள் இருந்தால் ஐந்து முக ருத்ராட்சம், ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது. மொத்தம் 1 – 21 முக ருத்ராட்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

பெரும்பாலும் 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சம் அதிகளவில் கிடைக்கின்றன. 5 அல்லது 6 முக ருத்ராட்சம் அணிய யாருக்கும் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.

இதனை அணிந்து கொண்டால் மது, மாமிசம், புகைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இருந்தாலும் அசைவ உணவு சாப்பிட முன்னர் இதனை கழட்டி வைத்து விட்டு, பின்னர் அடுத்த நாள் குளித்துவிட்டு இதனை அணிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here