உல்லாசக் கப்பலில் போதைப் பொருள் விருந்து: ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது

உல்லாசக் கப்பலில் போதைப் பொருள் பார்ட்டில் பங்கேற்ற விவகாரத்தில் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட மூவரைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை கடல் பகுதியில் இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்த கப்பல் முழுதும் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவச் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டிருப்பதை அவருடைய வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை நாளை வரை காவலில் விசாரிக்க மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கோர்ட்டு அனுமதியளித்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here