இந்தியாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்… 2 பேருக்கு பாதிப்பு உறுதி

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரிபுகளை ஒமைக்ரான் கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

ஓமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை உயிரிழக்கவில்லை என்றாலும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதனை தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் வெளிநாட்டினருக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன. அதேபோல், இந்தியாவிலும் வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இன்று 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் கூறும்போது, கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதினை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here