சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடாது

கோலாலம்பூர், ஜூலை 6-

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவுள்ள 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆர்.தி. ராஜசேகரன் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, திரெங்கானு, கிளாந்தான் ஆகிய 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடாது எனும் முடிவு கடந்த வாரம் நடத்தப்பட்ட கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டது.

4 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், மத்திய செயலவை உறுப்பினர்களின் கருத்துகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தகவல் உள்ளது.

ஆனாலும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சி என்ற முறையில் மஇகா அதன் கடமையைச் செய்யும். கட்சியின் இந்நிலைப்பாட்டினைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நலனைப் பாதுகாக்கவே இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியில் மஇகா களமிறங்கவில்லை. அதேசமயம் 16ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் செயல்பாட்டிற்குக் கூடுதல் கவனம் அளிக்கப்படும்.

இதனிடையே இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க உள்ள தொகுதிப் பங்கீடுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக அம்னோ உதவித்தலைவர் டத்தோஸ்ரீ  முகமட் ஹசானின் தகவலுக்கும் நாங்கள் செவிசாய்க்க விரும்புகிறோம்.

இக்கூற்றானது தேசிய முன்னணி உச்ச மன்றம் அல்லது மஇகாவில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவில்லை எனவும் ஆர்.தி. ராஜா அவ்வறிக்கையில் விவரித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்திற்குப் பிறகு நிருபர்கள் சட்டமன்றத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், தேர்தல்களில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு செய்வேன் எனக் கருத்துரைத்திருந்தார்.

அப்போதே இம்முறை சட்டமன்றத் தேர்தலில் மஇகா களம் இறங்காது என கட்சி வட்டாரங்கள் முன்பு கூறியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here