இவ்வாண்டு இறுதிவரை பொருட்களின் விலை உயராது அமைச்சர் உறுதி

படம்: தி.மோகன்

கோலாலம்பூர், ஜூலை 12-

இவ்வாண்டு இறுதிவரை பொருள் விலைகள் உயராமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும் என உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் கூறினார்.

தமது அமைச்சு பல்வேறு துறைகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் வழி தாம் இந்த உறுதி வழங்குவதாக அவர் சொன்னார். இதுவரை பொருள் விலைகளை உயர்த்துவதற்கு எந்தவிதக் கோரிக்கைகளும் வரவில்லை.

முன்னதாக தமது அமைச்சு இது குறித்து பல்வேறு துறைகளுடன் பேச்சு நடத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் 30 தொழில்துறைகள் தமது அமைச்சுக்கு அழைக்கப்பட்டன. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தாங்கள் பொருள் விலையை உயர்த்தப்போவதில்லை என அவர்கள் உறுதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்படி விலையேற்றம் இருந்தாலும் கூட தமது அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என நேற்று ஸ்தாப்பாக்கிலுள்ள எக்கோன்சேவ் பேரங்காடிக்கு வருகைதந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

தமது அமைச்சின் அமலாக்கப் பிரிவு மேற்கொண்டுவரும் திடீர் சோதனைகள் குறித்து விவரித்த அவர், அக்குழுவினர் பேரங்காடி, மளிகைக்கடை, மினிமார்க்கெட் போன்ற வியாபாரத் தளங்களிலும் திடீர் ங்ோதனை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வியாபாரிகள் பொருட்கள் விலை உயர்த்தப் போவதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தமது அமைச்சு இந்தத் துரித நடவடிக்கையில் இறங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பொருள் விலை திடீர் ஏற்றத்தால் பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்நோக்குவதைத் தவிர்ப்பதற்குத் தமது அமைச்சு இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், ஒற்றுமை அரசாங்கத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாக இது விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் பொருள் விலை 20 விழுக்காடு உயர்வு காணும் எனக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது உலகத்தில் எந்த அரசாங்கமும் பொருள் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார்.

எனினும் நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம்  பொருள் விலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம்

இதனிடையே நாட்டில் பணவீக்கம் குறைந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 3.3 விழுக்காடாக இருந்த நாட்டின் பணவீக்கம் கடந்த மே மாதம் 2.8 விழுக்காடாகக் குறைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரியில் 3.7 விழுக்காடாகவும் பிப்ரவரி மாதத்தில் 3.4 விழுக்காடாகவும் நாட்டின் பணவீக்கம் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு நாட்டின் பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நாட்டின் பணவீக்கம் 4.0ஆக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய ரஹ்மா விலைத் திட்டம் நாட்டில்  குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  அரசாங்கம் மேற்கொண்டு வரும் ரஹ்மா திட்டத்திற்கு விவசாய, உணவு பாதுகாப்புத்துறை முழு பங்காற்றி வருவதாகக் கூறிய அவர், அந்த அமைச்சு இதுவரை நாடு முழுவதும் 620 மலிவு விலை விற்பனைகளை மேற்கொண்டு வந்துள்ள தாகவும் அவர் கூறினார்.

தமது அமைச்சு 480 பொருட்களின் விலைகளைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நாள்தோறும் 186 பொருட்களின் விலையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் நாட்டிலுள்ள 1,400 பேரங்காடிகள், மினிமார்க்கெட், மளிகைக்கடை உட்பட பல்வேறு வர்த்தக மையங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களாகும் என அவர்  குறிப்பிட்டார்.

பொருட்களின் சில்லறை விலையை அமைச்சின் அகப்பக்கத்தில் பிரைஸ் கேட்சர் என்ற பிரிவில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here