ஜோகூர் :
கடந்த ஜூன் மாதம் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மூன்று நண்பர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட முஹமட் சாஃபிக் அஸ்மான், 25, குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் மற்ற இரு சந்தேக நபர்களான ஜெப்ரி மிஸ்யாடி, 37, மற்றும் கிறிஸ்டோபர் மோன் லோபஸ் @ முகமட் டேனியல் அப்துல்லா, 35, ஆகியோர் நீதிபதி V M மேபல் ஷீலா முன்நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, விசாரணை கோரினர்.
வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இன்னும் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து, கத்தி போன்ற கூறிய ஆயுதம் ஏந்தி, மூன்று வெவ்வேறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக குழுவாக சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஜூன் 16 அன்று காலை 6.40 மணியளவில் பொந்தியானில் உள்ள கம்போங் சிம்பாங் கிரி குக்குப்பின் ஜாலான் ஹாஜி சலீமில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் செயலைச் செய்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 மற்றும் 397 ன் படி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சவுக்கால் அடி ஆகியவற்றை அவர்கள் பெறலாம்.
இவ்வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் S. திவியா கையாண்டார், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன், மூவருக்கும் தலா ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM8,000 ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது,
பின்னர் வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கும் வழக்கறிஞரை நியமிப்பதற்கும் அடுத்த அக்டோபர் 11 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.





















