காசாவில் சிக்கிய பெற்றோர்.. வேதனையில் நாசா விஞ்ஞானி

காசா: ஹமாஸ் படையை அழிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசாவுக்குள் தரை வழியாக ஊடுருவியுள்ளனர். இந்நிலையில், தன்னுடைய பெற்றோர் காசாவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் மரணம் குறித்தும் நாசா விஞ்ஞானி ஒருவர் உருக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 7 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது வரை காசாவில் 450 குழந்தைகள் உட்பட 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 7,696 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் இடம்பெயர்வதை ஹமாஸ் படையினர் தடுப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள ஹமாஸ், வெளியேற சொல்லிவிட்டு இடம்பெயரும் மக்களையே இஸ்ரேல் குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது என விமர்சித்துள்ளது. இப்படி இருக்கையில் காசாவில் ஜெர்மன் குடியுரிமை பெற்ற தன்னுடைய பெற்றோர் இருப்பதாகவும், நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது x சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் பெற்றோர் தற்போது காசாவில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு தண்ணீர், மின்சாரம், உணவு இல்லாத சூழல் நிலவுகிறது. அவர்கள் இருந்து வந்த பீட் ஹனூன் பகுதியை விட்டு தற்போது வெளியேறியுள்ளனர். ஆனால் மற்றொரு வெளியேறும் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கெனவே இப்படி வெளியேறியவர்கள் இஸ்ரேலின் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டனர். எனவே எனது பெற்றோர் தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்கின்றனர். வெளியேறிச் செல்வது பாதுகாப்பானது கிடையாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆபத்தான சாலைகளில் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதை விட, தங்கள் வீட்டில் மரியாதையுடன் இறப்பது சிறந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

லீ அல்-பஸ்யோனி எனும் இந்த விஞ்ஞானி தற்போது நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ப்ரசவரோவன்ஸ் ரோவர் திட்டத்திலும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here