பாலி:
இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 14 முதல் சுற்றுலா வரியாக 150,000 ரூபியா செலுத்த வேண்டும்.
பாலியைச் சுற்றியுள்ள சிறு தீவுகளான நூசா பெனிடா, நூசா லெம்போன்கென், நூசா செனின்கென் ஆகியவற்றுக்குச் செல்பவர்களும் சுற்றுலா வரி செலுத்த வேண்டும்.
மேலும், இந்தோனேசியாவின் எந்தப் பகுதியில் இருந்து பாலிக்கு சென்றாலும் சுற்றுலா வரி செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.
பாலி தீவுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் பயணிகள் சுற்றுலா வரி செலுத்தியாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய சுற்றுலா வரி திட்டம் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவின் பயணத்துறை தகவல் வெளியிட்டது.
பயணிகள் விமான நிலையத்தில் உள்ள முகப்புகளில் வரியைச் செலுத்த வசதி உண்டு, இருப்பினும் பயணிகள் அவர்களது பயணத்திற்கு முன்பு ‘லவ் பாலி’ இணையப்பக்கம் மூலம் வரியைச் செலுத்த ஊக்குவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணையம் வழி வரி செலுத்துபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்பப்படும். அதை அவர்கள் பாலிக்குள் நுழையும்போது காட்ட வேண்டும்.
வரி மூலம் கிடைக்கும் நிதியை வைத்து பாலியின் சுற்றுலா சேவைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாலி உள்ளிட்ட சில பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அளவுக்கு மீறி அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகிறது.
மேலும், உள்நாட்டு மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பூசல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் பாலி இவ்வாண்டு 7 மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கிறது.
கடந்த ஆண்டு 5.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பாலிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.