ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21க்கு அதிகரித்து உள்ளதாகவும், ஆறு பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, மேற்கு சுமத்ரா மாநிலத்தின் பெசிசிர் செலத்தான் வட்டாரத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கிருந்த 75,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
“நேற்றைய (மார்ச் 10) நிலவரப்படி 21 பேர் இறந்துவிட்டனர், ஆறு பேர் மாயமாகிவிட்டனர்,” என்று ஃபாஜார் சுக்மா என்னும் அதிகாரி கூறினார்.
மேற்கு சுமத்ரா பேரிடர் தணிப்பு முகவையைச் சேர்ந்த அவர், சேத விவரங்களை AFP செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார்.
முன்னதாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 என்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஐந்து என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
காணாமல் போன ஆறு பேரையும் தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மூன்று வட்டாரங்களில் அந்தத் தேடுதல் பணி தீவிரமடைந்து உள்ளதாக தேடுதல், மீட்புப் பிரிவின் உள்ளூர் அதிகாரியான அப்துல் மாலிக் தெரிவித்தார்.
மேற்கு சுமத்ரா பேரிடர் தணிப்புப் பிரிவைச் சேர்ந்த 150 பேர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் ஈடுபட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, 650க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துவிட்டதாக தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பாடாங் பாரியாமன் என்னும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை ஒன்று சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
வெள்ளத்தில் 26 பாலங்கள், 25 பள்ளிகள் மற்றும் 113 ஹெக்டேயர் விளைநிலங்கள் சேதமடைந்துவிட்டன.
மாநிலத் தலைநகர் பாடாங்கில் இன்னும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்களும் உள்ளூர் நிர்வாகமும் விழிப்புநிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத மழை காலத்திற்குப் பின்னர் பல்வேறு வட்டாரங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இடியுடன் கூடிய மழை போன்ற மோசமான வானிலை நிலவக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிலையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




















