ஜெயிலில் இருந்தே திமுகவை இயக்குகிறார் செய்கிறார் செந்தில் பாலாஜி.. அண்ணாமலை ஓபன் டாக்

கோவை: சிறையில் இருந்து கொண்டே செந்தில் பாலாஜி திமுக அமைச்சர்களை இயக்கி வருகிறார் என்று கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, சூறாவளி பிரச்சாரத்தில் அவர் இறங்கியுள்ளார். கோவை தொகுதியில் நான் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கையாக கூறி வருகிறார். இதனிடையே, கோவை தொகுதியில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது அண்ணாமலையை தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கோவையில் உள்ள சரவணம்பட்டியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். தென் சென்னை, மத்திய சென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்டமான ரோடு ஷா நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதன் வேலூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு மோடி வரவுள்ளார். தமிழத்திற்கு பிரதமர் வருகிறார் என்றாலே திமுகவுக்கு பயம் வந்துவிடுகிறது. ஒரு நாட்டின் தமிழகத்தின் இத்தனை பகுதிகளுக்கு வந்து செல்கிறாரே.. ஆனால் முதல்வர் ஸ்டாலின் கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்றிருக்கிறார் என்பதை திமுகவினரால் சொல்ல முடியுமா?.

ஜெயிலில் ஒருவர் (செந்தில் பாலாஜி) அடைபட்டு ஓராண்டு ஆகப் போகிறது. அவர் ஜெயிலில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தக் கதையை தான் கோவைக்கு வரும் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். சிறையில் இருந்தபடியே அமைச்சர்களுடன் செல்போனில் பேசி வருகிறார் செந்தில் பாலாஜி. தங்கம், பணம் கொடுத்து கோவையில் ஜெயித்துவிடலாம் என்று திமுகவினர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

நீங்கள் இங்கு தங்க சுரங்கத்தையே இறக்கினாலும், இந்த முறை வேலைக்கு ஆகாதுங்கண்ணா. மக்கள் அதற்கெல்லாம் அசர மாட்டார்கள். யார் வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். ஜூன் 4-ம் தேதி அவர்கள் விதியை மாற்ற போகிறார்கள்” என அண்ணாமலை பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here