26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சரிவை நோக்கி செல்லும் ரிங்கிட்

கோலாலம்பூர்:

லேசிய ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

நிலைமையைக் கையாள தாங்கள் தயாராக இருப்பதாக மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா) மறுவுறுதிப்படுத்தியது.

நாணய மாற்றுவிகித சந்தை சீரான முறையில் செயல்படுவதைத் தாங்கள் உறுதிப்படுத்தப்போவதாக நேற்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்தது.

மேலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், பெரிய நிறவனங்கள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் அவ்வாறு செய்யப்போவதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.

நேற்று ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.78 வரை சரிந்தது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று டாலருக்கு நிகரான அதன் மதிப்பு 4.8053க்கு விழுந்தது. நேற்றும் ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட அந்த அளவு விழுந்தது.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு இவ்வாண்டு பிப்ரவரி 21ஆம் தேதிதான் ரிங்கிட்டின் மதிப்பு அந்த அளவு குறைந்தது.

எனினும், தென்கொரியாவின் வோன், பிலிப்பைன்சின் பெசோ, தைவான் டாலர் போன்ற இதர வட்டார நாடுகளின் நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 3.5122ஆக இருந்தது. நேற்றைய நாள் இறுதியிலும் அதன் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை.

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசிய மத்திய வங்கி சில நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, ரிங்கிட் படிப்படியாக மீண்டு வந்தது.

அமெரிக்கா டாலர் வலுவாக இருப்பது, மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவின் பொருளியல் மந்தமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் ரிங்கிட்டின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here