கவின்மலர்
அண்மைய ஆண்டுகளாக மலேசியாவில் அதிகரித்து வரும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பட்டுத்த ஒருமித்த ஒத்துழைப்பு அவசியம் என்று மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் நினைவுறுத்தினார்.2023 ஆம் ஆண்டு பதிவான தொழுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 256 பேராகும், 2022ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 183 நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் 73 நோயாளிகள் அதாவது 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் புதிய உள்ளூர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை சுழியமாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைகளுக்கு இணங்க, இந்த செயல்பாடுகளை வலுப்படுத்தப்பட்டது. நோயாளிகளை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதன. வழி இந்நோய் தொடர்ந்து பரவாமல் கட்டுப்படுத்த முடியும். தொழுநோய், மைக்கோபாக்டீரியா லெப்ரே என்ற ஒருவகை கிருமியால் ஏற்படும் நாள்பட்ட ஒரு தொற்றுநோயாகும், இது தோல், புற நரம்புகளைத் தாக்குகிறது. இந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து காற்றில் பரவும் திரவத் துளிகள் மூலம் நீண்ட காலமாக வெளிப்படும் நெருங்கிய தொடர்புகளுக்கு பரவுகிறது.
இந்நோய் நோயாளியைத் தொட்டவுடன் பார்த்தவுடன் பழகியவுடன் பரவாது.ஏறத்தாழ 5 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை நெருக்கத் தொடர்பு இருந்தால் மட்டுமே பரவவும் நோயின் தன்மை வெளிப்படவும் வாய்ப்புள்ளது. நோய்கண்டவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருப்பவர்களுக்கே இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.தொழுநோய் தொற்றின் அறிகுறிகள் தோலின் வெளிர் அல்லது சிவப்பு நிற திட்டுகளாகும், அவை அரிப்பு அற்றும், தொடு உணர்ச்சி குறைபாடும் அல்லது முற்றிலும் தொடு உணர்ச்சி இல்லாமலும் இருக்கும். வியர்க்காது நோயாளிகள் தோல் தடிமம் பெறலாம், குறிப்பாக காது மடல்கள், முக தோல் தடிமம் தட்டலாம் அத்துடன் புருவ முடி இழப்பு ஏற்படும். தொழுநோய் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள், நோயறிதலை உறுதிப்படுத்த உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
நோய் உறுதிப்படுத்தப்பட்டால் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை தினமும் மருந்து எடுத்துக் கொள்வதன்வழி குணப்படுத்த முடியும்.
பொது மக்களுக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் வழங்குவதே கொண்டாட்டத்தின் நோக்கமாகும். இந்த ஆண்டு உலக தொழுநோய் தினத்தின் கருபொருள் ‘தொழுநோயை வெல்’ அல்லது ‘தொழுநோயை தடுப்போம்’ என்பதாகும். சிகிச்சை பெற்றுவரும் ஒருவரிடம் டாக்டர் லிங்கேஸ்வரன் நலன் விசாரிக்கிறார்.