கோத்தா கினபாலு, ஆக. 19–
சபாவில் மலேசிய இந்து சங்கமும் சபா தொழில் துறை மேம்பாட்டுத் தொழில் முனைவோர் ஆட்சிக் குழுவும் கெம் லோக் காவி சுப்பிரமணியர் கோவிலும் புக்கிட் பாடாங் ஸ்ரீபசுபதிநாத் கோவிலும் இணைந்து கோத்தா கினபாலுவில் அமைந்துள்ள ஸ்ரீ பசுபதிநாத் கோவில் மண்டபத்தில் முதன் முறையாக இந்து ஈமச்சடங்குப் பயிற்சிப் பட்டறையை வெற்றிகரமாக நடத்தியது.
ஈமச்சடங்குகள் நம் இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். நமது முன்னோர்களின் நம்பிக்கையும் சடங்குகளையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கின்றது. அவ்வகையில் இந்து சமய சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான அறிவும் தெளிவும் திறனும் சபாவில் உள்ள இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இப்பட்டறை உறுதுணையாக மட்டுமன்றி வழிகாட்டியாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சி சபா இந்து சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொணர்ந்தது எனலாம். இங்கு வழக்கமாக இந்த சடங்குகளைப் பற்றி அறிந்திருக்கும் வயதான உறுப்பினர்கள், தங்களது மூப்பின் காரணிகளால் இந்த இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மேலும், இப்பகுதி வாழ் இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற சடங்குகளில் முறையான பயிற்சிகள் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக, இறுதிச் சடங்குகளின் முக்கியத்துவத்தைக் குறித்த விரிவான பயிற்சியையும் விளக்கமும் இந்தப் பட்டறையில் வழங்கப்பட்டன.
கலாச்சார பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இளைய தலைமுறையினருக்கு இது குறித்த அத்தியாவசிய அறிவை அவர்களிடையே பரப்புவது, பாரம்பரிய இந்திய பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இந்தச் சடங்குகளை நடத்த அவர்களுக்கு முழு அங்கீகாரம் அளிப்பது போன்றவை இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
சண்டகான், தாவாவ், லாஹாட் டத்து, கெனிங்காவ், லாபுவான் உட்பட சபா முழுவதிலிருந்து மொத்தம் 40 பங்கேற்பாளர்கள் இப்பட்டறையில் கலந்து சிறப்பித்தனர். நெகிரி செம்பிலான் மாநில மலேசிய இந்து சங்கத் தலைவரும் மலேசிய அர்ச்சகர் சங்கத்தின் கௌரவ பொருளாளருமான சிவஸ்ரீ டாக்டர் ஏ. எல். ஆனந்த்கோபி சிவாச்சாரியார் தமது இரண்டு உதவியாளர்களுடன் இந்தப் பட்டறையை முன்னின்று வழி நடத்தினார்.
சபா மாநிலத்தின் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் கே. மாதவன், பட்டறையின் வெற்றிகரமான செயல்பாட்டையும் பங்கேற்பாளர்கள் காட்டிய ஆர்வம் குறித்தும் தமது மன நிறைவைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்தப் பட்டறையை நனவாக்குவதில் தொழில் மேம்பாட்டின் தொழில் முனைவோர் ஆட்சிக் குழுவும் வழங்கிய சிறப்புமிக்க ஆதரவிற்கு தமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
“இந்தப் பட்டறையின் நோக்கம் வெற்றியடைய மாநில அரசு ஆட்சிக் குழுவின் ஆதரவு மிக முக்கியமானது” என்றும் கலாச்சாரம் அழிந்து விடாமலிருக்க சமூக மேம்பாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கலாச்சாரத்துடன் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் இளைய தலைமுறையினரிடையே தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அரசு அமைப்புகள், சமூக அமைப்புகளுக்கு இடையிலான இத்தகைய கூட்டுறவின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கினார்.
முதன்மை பயிற்சியாளராகப் பட்டறையை வழி நடத்திய சிவஸ்ரீ டாக்டர் ஏ. எல். ஆனந்த் கோபி சிவாச்சாரியார், நிகழ்ச்சியின் பலன் பயன் குறித்து தனது மன நிறையை வெளிப்படுத்திக் கொண்டார். சபா போன்ற பகுதிகளில் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு குறித்த அறிவும் தெளிவும் இழந்துவிடும் அபாயத்தில் உள்ள நிலையில், இந்து சமூகத்தினர் மத நடைமுறைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் இத்தகைய பட்டறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். “இந்தப் பட்டறை வெறுமனே சடங்குகளைக் கற்பிப்பது பற்றியது அல்ல; இது நமது சமூகத்தின் ஆன்மீக, கலாச்சார ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுத் தருவதாகும்” என்று டாக்டர் ஆனந்த் கோபி குறிப்பிட்டார்.
கோத்தா கினபாலுவைச் சேர்ந்த பங்கேற்பாளர் சீதாராமன், பட்டறையின் நடைமுறை மதிப்பை எடுத்துக் காட்டி, தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்புக்குரியவர் மரணமுற்ற நிலையில் அதற்கான முக்கியச் சடங்குகளை நிறைவேற்ற தனிநபரைத் தயார்ப்படுத்துவதில் இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பட்டறை எங்கள் பாரம்பரியங்களுக்கு ஏற்ப சடங்குகளை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டலையும் நம்பிக்கையையும் எங்களுக்கு வழங்கியுள்ளது. இது எங்கள் சமூகத்திற்கு, குறிப்பாக இறப்பு ஏற்பட்ட நேரங்களில் மிகவும் பயனளிக்கும்” என்று சீதாராமன் கூறினார். பட்டறையின்போது பெறப்பட்ட திறன்களையும் அதற்கான சடங்குகளையும் அவற்றிற்குரிய மரியாதையையும் நேர்த்தியுடன் குறையின்றி நடத்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.