சிரம்பான்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) தாமான் புக்கிட் கெபயாங்கில் நடந்த சோதனையைத் தொடர்ந்து ‘Ah Kit Group’ என்று அழைக்கப்படும் ஆன்லைன் முதலீட்டு மோசடி கும்பலை போலீசார் முடக்கியுள்ளனர்.
மாநில வணிக குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு, சட்டவிரோத முதலீட்டுத் திட்டம் தொடர்பான உளவுத் தகவல் அடிப்படையில் ஒரு பெண் உட்பட ஒன்பது உள்ளூர்வாசிகளைக் கைது செய்ததாக
நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அமாட் ஜாஃபிர் முகமட் யூசோஃப் கூறினார்.
21 முதல் 35 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
அவர்களிடமிருந்து 33 மொபைல் போன்கள், ஒன்பது மடிக்கணினிகள், ஏழு வாகனங்கள் மற்றும் 14 குறிப்பேடுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடிக்கும்பல் “Tantan, Tinder, Telegram, மற்றும் Facebook போன்ற சமூக வலைத் தளங்கள் மூலம் இல்லாத ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஜனவரி முதல் சிரம்பானிலுள்ள ஒரு வீட்டை அழைப்பு மையமாகப் பயன்படுத்தி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்தக் குழு முதன்மையாக அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்தது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த கும்பல், கால் சென்டர் ஆபரேட்டர்களுக்கு RM3,000 சம்பளத்தை வழங்கியதாகவும், குடியிருப்பு பகுதிகளை விடுதிகள் மற்றும் செயல்பாட்டு தளங்களாகப் பயன்படுத்தியதாகவும், சட்டப்பூர்வமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி, முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து, பாதிக்கப்பட்டவர்களை இந்தக் குழு கவர்ந்ததாகவும் அமாட் ஜாஃபிர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் ஏப்ரல் 28 முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420 மற்றும் 120(b) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.



















