ஜோகூர் பாரு:
இன்று காலை ஜோகூர்-சிங்கப்பூர் காஸ்வே பாலத்தில் நிகழ்ந்த தொடர் மோட்டார் சைக்கிள் விபத்தில் (Pile-up), சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மலேசியர்கள் காயமடைந்தனர்.
நேற்றுக் காலை சுமார் 9.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று, ஜோகூர் பாரு தெற்கு மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ராவ் செலாமாட் கூறினார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர், தனது பொருட்கள் சாலையில் விழுந்ததை கவனித்துள்ளார். அதனை எடுப்பதற்காகத் தனது வாகனத்தை நிறுத்தி திடீரென ‘U-Turn’ செய்துள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்ற நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் மோதினர்.
மேலும் விபத்தில் சிக்கிய 29 முதல் 50 வயதுடைய ஐந்து ஆண்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அனைவரும் சிகிச்சைக்காகச் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு (HSA) கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்) போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்து காரணமாகக் காஸ்வே பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சிதறிக் கிடக்கும் 9 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




















