சிகாமாட் | ஏப்ரல் 3, 2026:
சிகாமாட் அருகே நிகழ்ந்த மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒரு தம்பதி உட்பட மூவர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 2) மாலை சுமார் 4:00 மணியளவில், ஜொகூர் பாரு – சிரம்பான் சாலையின் 210-வது கிலோமீட்டரில், கிம்மாஸ் பாரு (Gemas Baru) அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்த வேனின் பின்புறத்தில், அதிவேகமாக வந்த டிரெய்லர் லோரி பயங்கரமாக மோதியது. இதில் அந்த வேன் அருகில் இருந்த சரக்கு லோரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
வேனை ஓட்டிச் சென்ற 70 வயது முதியவர் மற்றும் 20 முதல் 60 வயதுக்குட்பட்ட இரு பயணிகள் என மொத்தம் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்ற இருவர் சிகாமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) எனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதியானது என்று,
இந்நிலையில் சிகாமாட் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் முகமட் ஜுமாசான்சாஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபரான ஓட்டுநரைத் தடுப்புக் காவலில் (Remand) எடுத்து விசாரிக்க செகாமட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டது. ஆனால் ஓட்டுநர் போதையில் இருந்தது உறுதியானதால், தற்போது இது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 44(1)(a) (போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல்) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.




















