ஆன்லைன் முதலீட்டு மோசடி: மாரான் இல்லத்தரசி 1.08 லட்சம் ரிங்கிட்டை இழந்த பரிதாபம்!

மாரான்:

Facebook மூலம் அறிமுகமான போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி, மாரான் பகுதியைச் சேர்ந்த 51 வயது இல்லத்தரசி ஒருவர் 108,027 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் முகநூல் வாயிலாக அறிமுகமான நபர் ஒருவர், வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி, ஒரு முதலீட்டுத் திட்டத்தை அந்த நபர் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், அத்திட்டத்தின் ‘தலைவர்’ மற்றும் ‘மேற்பார்வையாளர்’ என மேலும் சிலரை அந்த இல்லத்தரசிக்கு அறிமுகம் செய்துள்ளனர் என்று, மாரான் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டென்ட் வோங் கிம் வாய் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்தப்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை, 14 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 38 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.

தான் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புப் பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் கடனாகப் பெற்ற பணம் என மொத்தம் 1,08,027 ரிங்கிட்டை அவர் முதலீடு செய்துள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி எவ்வித லாபமும் கிடைக்கவில்லை. மீண்டும் கூடுதல் பணம் கேட்டபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நேற்று போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் (மோசடி) விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் அல்லது தொலைபேசி எண்கள் குறித்து https://semakmule.rmp.gov.my என்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு வோங் கிம் வாய் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here