120 டாக்சி ஓட்டுநர்களுக்கு எக்கோன் சேவ் உதவி

மக்கள் ஓசை செய்தியின் எதிரொலி

ஸ்கூடாய் –

வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஜோகூர் டாக்சி ஓட்டுநர்கள் என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மக்கள் ஓசையில் செய்தி வெளியானது.

இச்செய்தியை அறிந்த ஸ்கூடாய் பேரேட் எக்கோன் சேவ் நிறுவன அதிகாரி மாஸ் இம்ரான் ஜோகூர் பாரு வட்டாரத்திலிலுள்ள 120 டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.

இந்தக் கோவிட் -19 வைரஸ் நோயால் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெரிதும் இழந்து தவிக்கும் டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்தப் பொருட்களை வழங்கினோம் என்று மாஸ் இம்ரான் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் தம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் எடுத்து மக்களுக்கு உதவி வருகிறது. அரசாங்கத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நல் எண்ணத்தில் இந்த உதவியை டாக்சி ஓட்டுநர்களுக்கு செய்கிறோம் என்றார்.

டாக்சி ஓட்டுநர் கி. குமரவேல் மக்கள் ஓசையின் செய்தியினால் எங்களுக்கு உதவிப் பொருட்கள் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்களில் பலருக்கு அரசாங்கம் உறுதியளித்த 600 வெள்ளி இன்னும் கிடைக்காத பட்சத்தில் தக்க சமயத்தில் இந்த உதவிப்பொருட்கள் கிடைத்ததால் பெரும் திருப்தி அடைகிறோம்.

பெரும்பாலான டாக்சி ஓட்டுனர்கள் பயணிகள் இல்லாமல் வருமானம் இல்லாமல் வெறுங்கையுடன் தங்கள் இல்லங்களுக்கு திரும்புகிறார்கள் என்று குமரவேல் தெரிவித்தார்.

தாமான் மெலோரில் வசிக்கும் பி. இராஜேந்திரன் (வயது 55) ஒவ்வொரு நாளும் கஞ்சி, கருவாடு, வெங்காயம் என்றுதான் நாங்கள் சாப்பிடுகிறோம். அரசாங்க உதவி 600 வெள்ளி கிடைத்தது. அதில் என் தந்தையின் ஈமச்சடங்கு செய்ய 400 வெள்ளி கொடுத்துவிட்டேன்.

இந்த இக்கட்டான சமயத்தில் மக்கள் ஓசை செய்தியின் மூலமாக இந்த உதவிப்பொருட்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன் என்றார்.
வீ.கே. கண்ணன் (வயது 65) மக்கள் ஓசை எங்கள் கஷ்டத்தை பத்திரிகையில் பிரசுரித்து எங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை பெற உதவி செய்ததால் இனி மக்கள் ஓசைதான் எங்கள் குடும்பப் பத்திரிகை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here