பெட்டாலிங் ஜெயா மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிப்பு

பெட்டாலிங் ஜெயா –

பெட்டாலிங் ஜெயா ஜாலான் ஓஸ்மானில் உள்ள பழைய மார்க்கெட்டில் காய்கறிகளை வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கோவிட் – 19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மார்க்கெட் மூடப்பட்டது.

நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து 5 தினங்களுக்கு இந்த மார்க்கெட் மூடப்படுவதாக பெட்டாலிங் மாவட்ட நிவாராணப் பேரிடர் நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

செலாயாங் பாசார் போரோங்கிற்குச் சென்று காய்கறிகளை வாங்கி வந்த காய்கறி வியாபாரிக்கு இந்நோய் பீடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் உட்பட இந்தப் பழைய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் நேற்று முதல் மருத்துவப் பரிசோதனை தொடங்கியது.

மேலும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பெட்டாலிங் ஜெயா பழைய மார்க்கெட்டிற்குச் சென்றவர்கள் கோவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளும்படி பெட்டாலிங் மாவட்ட நிவாராணப் பேரிடர் நடவடிக்கைக் குழுத்தலைவர் ஜொஹாரி அப்துல் கேட்டுக் கொண்டார்.

பெட்டாலிங் ஜெயா பழைய மார்க்கெட் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரானதும் இந்த மார்க்கெட் மீண்டும் திறக்கப்படலாம் என்றார் அவர்.

பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவிலுள்ள காய்கறிச் சந்தை கோவிட்-19 கிருமித் தாக்கத்தால் மூடப்பட்டது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி செலாயாங் பாசார் போரோங்கில் கிருமித் தொற்று நோய் அபாயக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள 8 வீடமைப்புப் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here