கிள்ளான் வட்டார இ-ஹெய்லிங் ஓட்டுநர்களின் மக்கள் நலச் சேவைகள்

கோவிட்-19 தொற்று பாதிப்பால் மக்கள் நாள்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சொல்லில் அடங்கா பல சுமைகளையும் சிரமங்களையும் அனுபவித்து வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் கிடைக்கும் ஒரு பகுதியை சிரமத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு சமையல் பொருட்கள், உணவுகள் கொடுத்து உதவலாமே என்ற நோக்கத்தில் கிள்ளான் வட்டார இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநர்களான 10 அன்பர்களால் சொந்த பணத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த மனிதநேய உதவி கடந்த ஓராண்டுகளாக தொடர்ந்து கொண்டிருகிறது என அதன் அமைப்புக் குழுத் தலைவர் விக்டர் ரெட்டி கூறினார்.    

இப்போது உள்ள காலகட்டத்தில் தங்களின் வருமானமும் பெருமளவில் பாதித்திருந்தாலும் நமக்கு கீழே இன்னும் பல குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன என்பதை கருத்தில் கொண்டு இந்தச் சேவையை தொடர்ந்து செய்து  வருவதாக விக்டர் தெரிவித்தார்.

நாங்கள் செய்யும் இந்த மனிதாபிமான உதவிகள்   KITA KAWAN SAMA KAPAL ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரின் பார்வைக்குப் போன பின்பு  வெளியிலிருந்தும் உதவிகள் வரத் தொடங்கியது என ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த எட்வின் பாலகிருஷ்ணன் கூறினார். மக்கள் கொடுக்கும் நிதி உதவிகள் மக்களுக்கே என்ற நோக்கத்தில் நேர்மையாக சேவையாற்றி வருவதால் பொதுமக்களும் நன்கொடையாளர்களும் துணிந்து உதவிகளை பணமாகவோ பொருளாகவோ கொடுக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

இந்த உதவிகளை அனைத்து இனத்தவர்களும் பாகுபாடின்றி பெற்றுச் செல்கின்றனர். சில குடும்பங்களுக்கு உடனடியான உதவிகளையும் வழங்கியுள்ளோம். கோவிட்-19 தொற்றுப் பாதிப்பால் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் சில குடும்பங்கள் உதவி கேட்பார்கள் அவர்களுக்கும் உடனடி தேவைகளை வழங்கியுள்ளோம் என எட்வின் குறிப்பிட்டார்.

கிள்ளானைத் தவிர்த்து ரவாங், டாமன்சாரா, கெப்போங் போன்ற பகுதிகளிலும் உதவித் தேவைப் படுவோருக்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம் என குறிப்பிட்ட இக்குழுவைச் சேர்ந்த மைக்கல், ஜோகூரிலும் இக்குழுவின் நண்பர்கள் இதுபோன்ற உதவிகளை செய்து வருவதாகவும் அங்கு செபஸ்தியன் என்ற அன்பர் இத்தகைய உதவிகளை நண்பர்களின் துணையுடன் செய்து வருவதாகவும் அதேபோல், ஈப்போவிலும் இதுபோன்ற உதவிகள் தொடர்வதாக குறிப்பிட்டார்.

இக்குழுவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களாகவும் சிலர் வேலை செய்து கொண்டே பகுதி நேர ஓட்டுநர்களாகவும் இருந்தும் மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்த இக்கட்டான காலகட்டதில் வழங்க வேண்டும் எனற நல்ல நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் நல்ல உள்ளங்களின் ஆதரவு தொடர்ந்தால் இந்த மக்கள் சேவையை மேலும் விரிவாக செய்யும் எண்ணம் உள்ளதாக மைக்கல் தெரிவித்தார்.   மேல் விபரங்களுக்கு kitakawansamakapal@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here