தைராய்டு பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க

மனித உடலில் தைராய்டு சுரப்பி மிகவும் முக்கியமான பணியை செய்கிறது. இந்த சுரப்பி பட்டாம்பூச்சியின் வடிவில் கழுத்துப் பகுதியின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சுரப்பியின் பணி என்னவென்றால் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை கண்காணிப்பதாகும். ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக, ஏராளமான மக்கள் இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால், அதற்கு சரியான சத்தான உணவை உண்ண வேண்டும். அந்த வகையில் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாகவும், ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்கள் எதுவும் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்பதை இப்போது காண்போம். இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், மாதுளையை விட 17 மடங்கு அதிகமாகவும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இப்பழம் இந்தியாவில் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் சூப்பர் பழம். பெரும்பாலும் தலைமுடிக்கு நல்லது என்று அனைவராலும் அறியப்படும் இந்த நெல்லிக்காய், நரைமுடியைத் தடுக்கிறது, பொடுகைத் தடுக்கிறது, மயிர்கால்களை வழப்படுத்துகிறது மற்றும் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட நெல்லிக்காய் தலைமுடிக்கு மட்டுமின்றி, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தேங்காய்

தைராய்டு நோயாளிகளுக்கு தேங்காய் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதற்கு தேங்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் எண்ணெய் வடிவிலும் உணவில் சேர்க்கலாம். இது மெதுவான மற்றும் மந்தமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தேங்காயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மற்றும் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் ஏராளமாக உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஜிங்க் ஏராளமாக உள்ளது. இது உடலில் உள்ள மற்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு முக்கியமான சத்தாகும். மேலும் இது தைராய்டு ஹார்மோன்களின் தொகுப்பு மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது. ஆகவே பூசணி விதைகளை அன்றாடம் உட்கொள்ளும் சாலட்டுகளில் சேர்க்கலாம் அல்லது ஸ்நாக்ஸ் நேரத்தில் வெறுமனே சாப்பிடலாம்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் உள்ள செலினியம் என்னும் நுண்ணூட்டச்சத்து தைராய்டு ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஒன்றாகும். மேலும் T4 ஐ T3 ஆக மாற்றுவதகு செலினியம் தேவைப்படுகிறது. இந்த செலினியம் பிரேசில் நட்ஸில் வளமாக இருப்பதால், தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை இந்த நட்ஸ் மேம்படுத்தும். சொல்லப்போனால், ஒரு நாளைக்கு 3 பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தைராய்டு கனிமச்சத்துக்கள் உடலுக்கு போதுமான அளவு கிடைக்கும். ஆகவே இந்த நட்ஸ் கிடைத்தால் தினமும் 3 சாப்பிட முயலுங்கள்.

பச்சை பயறு

பச்சை பயறில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இவற்றில் நார்ச்சத்து ஏராளமாக இருப்பதால், இது தைராய்டு சமநிலையின்மையால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக பயறுகளிலேயே பச்சை பயறு எளிதில் செரிமானமாகக்கூடிய பயறு ஆகும். ஆகவே தான் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களை பச்சை பயறு சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பச்சை பயறை ஊற வைத்து பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here