வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப புள்ளி எனக் கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் பூஸ்டர் டோசை பெற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊசியின்றி வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

சீனாவின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நேற்று முதல் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனாவுக்கு வாய் வழியாக வழங்கப்படும் உலகின் முதல் தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here