பாகிஸ்தானில் சிலிண்டர்கள் பற்றாக்குறை; ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை அடைத்து அனல்பறக்கும் விற்பனை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு கியாஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் விநியோகத்தை வெகுவாக குறைத்துள்ளனர்.

இதன் விளைவாக அந்த நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பைகளில் 3 அல்லது 4 கிலோ சமையல் எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது என்றும், சமையல் எரிவாயு நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள் என்றும், அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் மக்கள், அதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி பயன்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்வது கையில் வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம் என்றும், இதனால் மிகவும் மோசமான விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பிளாஸ்டிக் பைகளால் காயமடைந்து 8 நோயாளிகள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here