சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 15 பேர் பலி

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான சிரியாவையும் கடுமையாக உலுக்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. நிலநடுக்கம் ஏற்பட்டு 2 வாரங்கள் ஆகியும் அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து, கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம் இயற்கையின் ருத்ர தாண்டவத்தால் ஏற்பட்ட இந்த பேரழிவில் இருந்து சிரியா மீண்டு வருவதற்குள் அங்கு அடுத்தடுத்து சோகங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில் உள்ள அல்-சோக்னா நகரில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் கடந்த ஓர் ஆண்டில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

இயற்கையின் கோர முகம் மற்றும் பயங்கரவாதிகளின் வெறிச்செயலை தொடர்ந்து, சிரியாவின் அண்டை நாடான இஸ்ரேல் அங்கு வான்தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிரியா-இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.

இந்த நிலையில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் அருகே மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த இராணுவ வளாகங்களின் தாயகமாக விளங்கும் கபர் சூசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

அதிக மக்கள் தொகை கொண்ட நகர் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. 15 பேர் பரிதாப சாவு இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த வான்தாக்குதலால் சிரியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here