உருகுவே கடற்கரையோரத்தில் இறந்து கிடந்த ஈராயிரம் பென்குவின்கள்

உருகுவேயின் கிழக்குக் கரையோரப் பகுதியில் கடந்த 10 நாட்களாக ஏறக்குறைய 2,000 பென்குவின்கள் இறந்து கிடந்தன. அதற்கான காரணம் தொடர்ந்து புதிராக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் இறந்த அந்த ‘மெஜல்லேனிக்’ ரக பென்குவின்கள் உருகுவேயில் கரை ஒதுங்கியதாக சுற்றுப்புற அமைச்சைச் சேர்ந்த திருவாட்டி. கார்மன் லெய்ஸாகோயன் தெரிவித்தார்.

“அவற்றில் 90 விழுக்காடு இளம் பென்குவின்கள். அவை பட்டினியாக இருந்தன,” என்று கூறிய அவர், பென்குவின்களிடம் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் பறவைக் காய்ச்சல் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான பென்குவின்கள் இறந்துபோவது வழக்கமான ஒன்று என்றாலும், அதிக எண்ணிக்கையில் அவை இறந்துபோவது வழக்கத்திற்கு மாறானது என்று கூறப்பட்டது.

‘மெஜல்லேனிக்’ ரக பென்குவின்கள் தென் அர்ஜென்டினாவில் வசிக்கின்றன. உணவைத் தேடி அவை வடக்கே இடம்பெயர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here