‘அபராதம் கட்டியும் லோரி விடுவிக்கப்படவில்லை’; வயிற்றுப்பிழைப்பிற்கு நாங்கள் என்ன செய்வது? – லோரி உரிமையாளர்

கோலாலம்பூர்:

அனுமதிக்கப்பட்ட அளவைவிட பாரம் ஏற்றிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்திய பிறகும், சாலைப் போக்குவரத்துத் துறையினரால் (JPJ ) பறிமுதல் செய்யப்பட்ட லோரி விடுவிக்கப்படாததால், ஓட்டுநர்கள் குழு ஒன்று தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளது.

லோரி இல்லாததன் காரணமாக மாதாந்திர தவணைக் கட்டணம் கூட கட்டமுடியவில்லை என்றும், அதன் காரணமாக லோரி உரிமையாளர் ஒருவர் வங்கியால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் குறித்த குழு கூறியது.

அத்தோடு பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் அபராதம் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தாலும் கூட, JPJ இனால் பறிமுதல் செய்யப்பட்ட லோரி இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குழுவின் வழக்கறிஞர் முஹமட் கைருதின் அன்னுார் கூறுகையில் “எனது கட்சிக்காரர்கள் மீதான இந்த நடவடிக்கை மிகவும் நியாயமற்றது, ஏனெனில் அபராதம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது, இது லோரியை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று தனது கட்சிக்காரர்கள் உட்பட 50 லோரி ஓட்டுநர்களுடன் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) ஆஜராகிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

43 வயதான லோரி ஓட்டுநர் சண்மகராஜா கனக ராஜா கூறுகையில் , கடந்த டிசம்பரில் தனது லொறியை JPJ கைப்பற்றியதால் வருமானத்தை இழந்த லோரி டிரைவர்களில் தானும் ஒருவர் என்று கூறினார்.

அபராதம் கட்டப்பட்டது, ஆனால் இது வரை லோரி விடுவிக்கப்படவில்லை, இப்போது என்னை கருப்பு பட்டியலில் சேர்க்க வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்றார் அவர்.

“எனது லோரி கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை, நாங்கள் போதைப்பொருள் கொண்டு செல்லவில்லை, நாங்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லவில்லை, அதிக சுமைகளை ஏற்றிச் சென்றது எனது தவறு, சாலை வரி மற்றும் அனைத்து ஆவணங்களும் இன்னும் செல்லுபடியாகும் மற்றும் தடுத்து வைக்கப்படும்போது முழுமையாக இருந்தன. இது நியாயமில்லை,” என்றார்.

58 வயதான Teh Chee Min கூறுகையில், அதிக சுமை ஏற்றிய குற்றத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தாலும், அவரது லோரி தகுதி நீக்க அறிவிப்பு வெளியிடப்படாது உள்ளது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

விலை அதிகரிப்பு, குறிப்பாக எண்ணெய் விலை, டயர் விலை, மற்றும் இதர பராமரிப்பு செலவுகள் காரணமாக பல லோரி ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சுமைகளை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது என்றார்.

எனவே , சுமை வரம்பு தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட லோரிகளை விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம், குறிப்பாக ஜேபிஜே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் தாம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் குறித்த லோரி ஓட்டுநர்கள் குழு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here