காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்;சுமார் 50 பேர் பலி

காஸா:

காஸாவின் மிகப் பெரிய அகதிகள் முகாமின்மீது இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மாண்டவர்களில் ஹமாஸ் இயக்கத் தளபதி ஒருவரும் அடங்குவார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் திடீர்த் தாக்குதல் நடத்தி பலரைப் பிணைபிடித்த நிலையில், காஸாமீது இஸ்ரேல் தொடர்த் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

பல நாள்களாக வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்குமுன் அதன் பீரங்கிப் படைகள் தரைவழியாக காஸாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அங்குள்ள ஜபலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஹமாஸ் தளபதி இப்ராகிம் பியாரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதன் தாக்குதலில் குறைந்தது 50 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

ஆயினும், ஹமாஸ் மூத்த தளபதிகளில் எவரும் கொல்லப்படவில்லை என்ற அவ்வியக்கத்தின் பேச்சாளர் ஹஸம் காசம், அப்படிக் கூறிக்கொண்டு அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அண்மைய தாக்குதலால் அப்பகுதியில் பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, காஸாவில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனமும் மற்ற உதவி அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

ஜபலியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்குப்பின், அருகிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையை ஒட்டி, பல சடலங்கள் கிடத்தப்பட்டிருந்ததைத் தனக்குக் கிடைத்த படங்கள் காட்டின என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இவ்வேளையில், கடும் காயமடைந்த 81 பேர் காஸாவிலிருந்து எகிப்து சென்று சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன எல்லை ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here