மிசோரி:
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தூதரகம் கூறியது.
“மிசோரியில் செயின்ட் லூயிசில் உயிரிழந்த அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறோம்,” என்று இந்திய தூதரகம் எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை மாலை அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரின் நண்பரும் இந்திய தொலைக்காட்சி நடிகையுமான தெவோலீனா பட்டாச்சார்ஜி தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து விசாரணைகளை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய தூதரகத்தையும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
நடனக் கலைஞர் அமர்நாத் அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை எனத் தெரிவித்துள்ள நடிகை தெவோலீனா, அவரது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தாயார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“துப்பாக்கியால் சுட்டவரின் விவரம் எதுவும் தெரியவில்லை. அமர்நாத்துக்காக குரல் கொடுக்க உறவினர்கள் யாரும் இல்லை, நண்பர்கள் மட்டுமே உள்ளனர்,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.