அமெரிக்காவில் இந்திய மாணவர் கடத்தல்

மெரிக்காவில் மாயமான ஹைதராபாத் மாணவரை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் மீதான தொடரும் வன்முறைகள், இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நாச்சாரத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பத். இவர், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 7ம் தேதிக்குப் பின்னர் முகமது அர்பத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக முகமது அர்பத்தின் தந்தை முகமது சலீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 19ம் தேதி அன்று, முகமது அர்பத்தின் குடும்பத்தினருக்கு அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முகமது அர்பத், போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க 1,200 அமெரிக்க டாலர்களை தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். அந்தப் பணத்தை தராவிட்டால் முகமது அர்பத்தின் கிட்னியை விற்று விடுவோம் எனவும் மிரட்டியதாக அவரது தந்தை முகமது சலீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முகமது அர்பத்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முகமது அர்பத்தின் குடும்பத்தினர் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரை விரைவில் கண்டுபிடிக்க உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள இந்திய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது. பல இந்திய மாணவர்கள் துர்மரணமடைந்துள்ளது அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பருச்சூரி அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், அதன் அருகே உள்ள வனப்பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்டார். பர்டூ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் சமீர் காமத் (23), கடந்த மாதம் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். ஜனவரி மாதம் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மாணவரான அகுல் தவான் (18) மர்மமான முறையில் இறந்துகிடந்தார். ஜனவரி மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில் இந்திய மாணவர் விவேக் சைனி (25) ஜார்ஜியாவில், போதை நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். தற்போது மேலும் ஒரு இந்திய மாணவர் கடத்தப்பட்ட நிலையில் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here