தேசிய ஆவணக் காப்பகக் கருத்தரங்கில் தமிழ் கெலிகிராப்பிக்கு அங்கீகாரம்

கோலாலம்பூர் –
மொழியின் நிலைத்தன்மைக்கு, உரமிட்டு புதுமைப்படுத்துதல் அவசியம் என்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ்செயல்படும் தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய “2024 தேசிய பேச்சு வழக்கு மொழி மாநாடு: சமூக மொழியின் வலிமையைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில் தமிழ் கெலிகிராப்பி (தமிழ் வனப்பெழுத்துக்கு) மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மகுடம் சூட்டியது.

புத்ரா பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு, கட்டுமானத் துறை தலைவர் துணைப் பேராசிரியர் முனைவர் முகமட் ஜொஹாரி முகமட் யூசோப் ஆதரவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ் வனப் பெழுத்து களால் வரையப்பட்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டாகாங் ஆகியோரின் ஓவியங்களுடன் தமிழ் கெலிகிராப்பி எழுத்துகளால் உருவாக்கப்பட்ட தபால் தலைகள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ஆரோன் அகோ டாகாங், தமிழ் கெலிகிராப்பியைக் கொண்டு வரையப்பட்ட தனது படத்தைப் பார்த்து மகிந்தார்.மலேசிய புத்ரா பல்கலைகழகத்தின் சார்பில் அந்த ஓவியம் அமைச்சருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ் கெலிகிராப்பி எழுத்துகளின் மூலம் அந்த ஓவியங்களை வரைந்த புத்ரா பல்கலைகழகத்தின் வடிவமைப்புத் துறை விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் அமைச்சருக்கு ஓவியத்தை வழங்கினார்.

எல்லா மொழிகளின் சிறப்பையும் தொன்மையையும் தேசிய ஆவணக்காப்பகம் பாதுகாக்கும். அந்த முயற்சியின் ஓர் அங்கமாக தமிழ் கெலி கிராப்பி இந்தக் கண்காட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டது என்று மலேசிய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ ஜாப்பார் சீடேக் பின் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here