சுங்கை துவா கொலை வழக்கு: கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்- இருவர் கைது!

பட்டர்வொர்த், பிப்ரவரி 5:

ஸ்ரீ முர்னி அடுக்குமாடிக் குடியிருப்பில் (Flat Sri Murni) 41 வயது பெண் ஒருவர் படுக்கையறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

நேற்று, முதல் மாடியில் உள்ள தனது வீட்டில் அந்தப் பெண் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் இருந்தது கண்டறியப்பட்டது என்று, பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறினார்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று நம்பப்படுகிறது.

“கைது செய்யப்பட்ட இருவரும் இன்று முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவர் என்றும், உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்” என்றும் அவர் சொன்னார்.

தடயவியல் நிபுணர் டத்தோ டாக்டர் ஜஹாரி நூர் அளித்த முதற்கட்டத் தகவல்கள் அடிப்படையில், அந்தப் பெண்ணின் கழுத்தில் ஒரு ஆழமான வெட்டுக்காயம் உள்ளது. அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

வீட்டில் போராட்டம் நடந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தப் பெண் தனக்கு மிகவும் தெரிந்த ஒருவராலேயே தாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

உயிரிழந்த பெண்ணின் உடல் தற்போது கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here